×

சென்னை தி.நகரில் பாஜ சார்பில் நடத்தப்பட்ட மோடியின் ரோடு ஷோ கூட்டம் இல்லாமல் பிசுபிசுத்தது: கடைகள் அடைப்பு, வாகன போக்குவரத்து தடையால் மக்கள் கடும் அவதி

சென்னை: சென்னை தி.நகரில் பாஜ சார்பில் நேற்று நடத்தப்பட்ட பிரதமரின் ரோடு ஷோ கூட்டம் இல்லாமல் பிசுபிசுத்தது. கடைகள் அடைப்பு, வாகன போக்குவரத்து தடையால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. இதனால், முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தமிழ்நாட்டின் பக்கம் தேசிய தலைவர்களின் பார்வை திரும்பியுள்ளது. அந்த வகையில் பாஜ மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ஏற்கனவே 6 முறை தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் பாஜ மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் மோடி 7வது முறையாக நேற்று தமிழகம் வந்தார்.

இரவு 6 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்து இறங்கிய பிரதமர் மோடிக்கு பாஜ நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து சாலை மார்கமாக தியாகராய நகர் பனகல் பூங்கா பகுதிக்கு சென்றார். அங்கு, பா.ஜ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகன பேரணியில் பங்கேற்றார். தமிழக பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டை அணிந்து மோடி வந்தார். பனகல் பூங்கா முதல் பாண்டி பஜார் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வாகன பேரணி நடைபெற்றது. பிரதமரின் வாகனத்தில் வேட்பாளர்கள் தமிழிசை சவுந்தரராஜன்(தென்சென்னை), வினோஜ் பி.செல்வம்(மத்திய சென்னை), பால்கனகராஜ்(வடசென்னை) மற்றும் அண்ணாமலை (கோவை) ஆகியோர் இருந்தனர். கையில் தாமரை சின்னத்துடன் அவர் பாஜ வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ரோடு ஷோ தொடங்கிய இடத்தில் மட்டும் பாஜ தொண்டர்கள் சாலையின் இருபுறமும் நின்றிருந்தனர். அவர்கள் பிரதமருக்கு மலர்களை தூவி வரவேற்றனர். அங்கு மட்டும் ‘‘பாரத் மாதா கீ ஜே’’ , ‘‘மோடி… மோடி…’’ என கோஷம் ஒலித்தது. மற்ற பகுதிகளில் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் கூட்டம் இல்லை. விரல் விட்டு எண்ணும் அளவுக்கு மட்டுமே பாஜவினர் இருந்தனர். அதுவும் காசு கொடுத்து அழைத்து வந்தவர்கள் மட்டும் கையில் கொடியுடனும், தோளில் பாஜ சின்னம் போட்ட துண்டையும் அணிந்து காணப்பட்டனர்.

கூட்டம் குறைவாக இருந்ததால் முதல் இடத்தில் இருந்தே தொண்டர்கள் வரவழைக்கப்பட்ட காட்சியை காண முடிந்தது. திருப்பூரில் பாஜவினர் நடத்திய பொதுக்கூட்டம் போல மக்கள் கூட்டம் இருக்கும் என்று பாஜ தலைவர் அண்ணாமலை எதிர்பார்த்து இருந்தார். ஆனால், கூட்டம் இல்லாததால் அவர் கடும் அப்செட் ஆகி காணப்பட்டார். பிரதமர் வந்தால் எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் அண்ணாமலை, பிரதமருடன் இருந்த போதும் முகத்தில் சிரிப்பை பார்க்க முடியவில்லை. முகம் இறுகிய நிலையில் காணப்பட்டார். சென்னைக்கு என்று பல முகங்கள் இருப்பினும் சென்னையின் முக்கியமான முகங்களுள் ஒன்றுதான் தி.நகர். கடை வீதிகள் அதிகம் நிறைந்த பரபரப்பான பகுதி.

தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் விழாக்காலங்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் இங்கு திருநாள் தான். சென்னைக்குப் புதிதாக வந்தவர்கள் ஒருமுறையாவது சுற்றிப்பார்த்துவிட வேண்டும் என்று ஆசைப்படும் இடங்களில் இந்த தி.நகரும் ஒன்று. அந்த அளவுக்கு தினமும் லட்சக்கணக்கானோர் துணிகள், நகைகள், பாத்திரங்கள் உள்பட அனைத்து வகையான பொருட்களை வாங்க குவிவது வழக்கம். நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அது மட்டுமல்லாமல் நேற்று யுகாதி பண்டிகை விடுமுறை தினம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தி.நகரில் பொருட்கள் வாங்க மக்கள் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் இந்த நேரத்தில் பிரதமரின் ரோடு ஷோவால் தி.நகர் உள்பட சுற்றியுள்ள எந்த பகுதிக்கும் மக்கள் செல்ல மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரை தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் ரோடு ஷோ நடைபெற்ற அனைத்து சாலைகளிலும் உள்ள கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது. இதனால், எப்போதும் மக்கள் வெள்ளமாக காணப்படும் தி.நகர் பகுதி வெறிச்சோடியது. இதனால், தி.நகர் பகுதியில் கடை வைத்திருந்தவர்கள் கடும் இழப்பை சந்திக்க நேரிட்டது. அது மட்டுமல்லாமல் சென்னையில் வர்த்தப்பகுதியில் இந்த பேரணியை நடத்துவதா? என்று மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

மேலும் பிரதமரின் வாகன பேரணியில் தி.நகர் பகுதிக்குள் வாகனங்கள் எதுவும் இயக்கப்படவில்லை. மேலும் பிரதமர் வந்த பகுதிகளிலும் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. இதனால், அலுவலகம் விட்டு சென்றவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பேரணி நடைபெற்ற அனைத்து இடங்களிலும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ரோடு ஷோவை முடித்து கொண்டு பிரதமர் மோடி கிண்டி ராஜ்பவனில் இரவு தங்கினார். தொடர்ந்து, இன்று காலை 10 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் வேலூருக்கு செல்கிறார். அங்கு, பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அங்கு ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். பின்னர் அரக்கோணத்தில் இருந்து கோவைக்கு செல்கிறார். அங்கிருந்து, மேட்டுபாளையம் செல்கிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுகிறார். தொடர்ந்து வரும் 13, 14ம் தேதியும் தமிழகத்தில் மோடி பிரசாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

The post சென்னை தி.நகரில் பாஜ சார்பில் நடத்தப்பட்ட மோடியின் ரோடு ஷோ கூட்டம் இல்லாமல் பிசுபிசுத்தது: கடைகள் அடைப்பு, வாகன போக்குவரத்து தடையால் மக்கள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Modi ,BJP ,Chennai D. Nagar ,Chennai ,Puducherry, Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மத அடிப்படையிலான பட்ஜெட், கல்வி,...